Home » » பணம்தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று வாழ்ந்தால் அதுவே எம்மை பரிதவிக்க வைத்து விடும்!

பணம்தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று வாழ்ந்தால் அதுவே எம்மை பரிதவிக்க வைத்து விடும்!

படிப்படியாக உயர்வது நீடித்த பலனைத் தரும். பணம் ஒன்றே வாழ்க்கையின் குறிக்கோள் என்று வாழத் தலைப்பட்டோமானால் அந்தப் பணமே எங்களைப் பரிதவிக்க வைத்து விடும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
புதுக்குடியிருப்பில் புதிதாக அமைக்கப்பட்ட சந்தைக் கட்டடத்தொகுதியை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்தகால யுத்த அனர்த்தத்தின் போது முழுமையாக அழித்தொழிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு நகரம் புத்துயிர் பெற்று மீண்டெழுவதுபோல புதிய கட்டடங்கள், கடைத்தொகுதிகள் என பல கட்டடங்கள் அமைக்கப்பட்டு மீளப்பொலிவு பெறுகின்றன.
இந்த சந்தர்ப்பத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசசபைக்கு உட்பட்ட இச்சந்தைக் கட்டடத்தொகுதி மரக்கறி வகைகள், பழவகைகள், வெற்றிலைக்கடைகள் என சுமார் 32 கடைத்தொகுதிகளைக் கொண்டதும், மீன்சந்தை (ஏற்கனவே அமைக்கப்பட்ட) ஆகிய அனைத்து வசதிகளுடனும் சுமார் ஒரு ஏக்கர் விஸ்தீரணமுள்ள நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசம் ஒரு விவசாய, மரக்கறி உற்பத்தி பிரதேசமாக விளங்குவதால் எதிர்காலத்தில் மிகக்கூடுதலான விவசாய உற்பத்தி உள்ளீடுகள் இந்த விற்பனை நிலையங்களுக்கு எடுத்துவரப்படுகின்ற போது அவற்றைக் கொள்வனவு செய்வதற்கு பிறமாவட்டங்களில் இருந்தும் மொத்த விற்பனை முகவர்கள் இங்குவந்து பழங்கள், மரக்கறி வகைகளை கொள்வனவு செய்யக்கூடிய நிலைகள் ஏற்படலாம்.
எனவே இந்த சந்தைக் கட்டடத்தொகுதியில் இன்று ஆரம்பிக்கப்படுகின்ற புதிய வர்த்தக நடவடிக்கைகள், நுகர்வோரைக் கவரக்கூடிய விதத்திலும் ஓரளவு மலிவாகவும் கிடைக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.
அதே நேரம் வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற வர்த்தகர்களும் நீடித்து நிலைத்திருக்கக் கூடிய வகையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சாதாரண நாட்களில் கிலோ 40 – 50 ரூபாவுக்கு விற்பனையாகும் மரக்கறிகள் தைப்பொங்கல், வருடப்பிறப்பு, தீபாவளி, ஆடி அமாவாசை தினங்களில் மட்டும் 200 ரூபாவுக்கு மேல் விலை ஏறுகின்றதா? ஏற்றப்படுகின்றதா? என்பது புரியவில்லை.
இவ்வாறான திடீர் ஏற்ற இறக்கங்களின்றி வியாபாரத்திற்குரிய நியமங்களுடன் சீரான வகையில் உங்கள் வர்த்தகம் மேற்கொள்ளப்படவேண்டும். இன்று அனைவரும் ஒரே இரவில் கோடீஸ்வரர்களாக மாறத்துடிக்கின்றனர்.
தம்மிடம் உள்ள கையிருப்புக்கு ஏற்ற வர்த்தகத்தில் ஈடுபடாது வட்டிக்கு பணம் கொடுக்கும் நிதி நிறுவனங்கள், முகவர்களிடம் இருந்து தமது சக்திக்கு அதிகமான பணத்தை கடனாகப் பெற்று கடனையும் அடைக்க முடியாமல் வட்டியைக் கூட கொடுக்க முடியாமல் தத்தளிக்கின்றார்கள்.
ஈற்றில் தமது உடமைகளையும் விற்று வாகனங்கள், பொருள் பண்டங்களையும் தொலைத்துவிட்டு முகவரி இன்றி திரிகின்ற பலர் எமக்கு பாடமாக அமையவேண்டும்.
பழைய வாழ்க்கை முறைமையை ஒருதரம் திரும்பிப் பார்த்தால் சிறுகச் சேர்த்து பெருக வாழ்ந்த அந்த வாழ்க்கை முறைமை எம்மை பூரிப்படைய வைக்கும்.
படிப்படியாக உயர்வது நீடித்த பலனைத் தரும். பணம் ஒன்றே வாழ்க்கையின் குறிக்கோள் என்று வாழத் தலைப்பட்டோமானால் அந்தப் பணமே எங்களைப் பரிதவிக்க வைத்து விடும். மனிதாபிமானத்துடன் பணஞ் சேர்த்தல் நீடித்த மனமகிழ்வைத் தரும் என குறிப்பிட்டுள்ளார்.


Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups