Home » » விக்னேஸ்வரனை பதவி நீக்குவது எமது கண்களை நாமே குத்திக் கொள்ளும் செயல்: நாடுகடந்த தமழீழ அரசாங்கம் கண்டனம்

விக்னேஸ்வரனை பதவி நீக்குவது எமது கண்களை நாமே குத்திக் கொள்ளும் செயல்: நாடுகடந்த தமழீழ அரசாங்கம் கண்டனம்

தமிழ் மக்களின் அபிமானம் பெற்றவொரு தலைவராகவும் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒருவராகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் விளங்குகிறார். அவரை பதவிநீக்கம் செய்ய முயல்வது எமது கண்களை நாமே குத்திக் கொள்ளும் செயலாகவே அமையும் என நாடுகடந்த தமழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அறிக்கையில்,
வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் C.V விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மான முயற்சி குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சருக்கு ஆதரவாகத் தமிழ் அமைப்புகளும் மக்களும் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கும் தனது தோழமை கலந்த ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வு எனக்கூறி அறிமுகம் செய்யப்பட்ட மாகாணசபை முறை எந்தவகையிலும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வாக அமைய முடியாது என்பதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடு என்பதனை நாம் முன்னரே வெளிப்படுத்தியிருக்கிறோம்.
இருந்தும் இந்த மாகாணசபை முறையினை சிங்கள பௌத்த பேரினவாதம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், இச் சபையினை ஓர் அரசியல் மேடையாகப் பயன்படுத்தவும், சபையின் ஊடாக சிறிய அளவிலேனும் செய்யக்கூடிய மேம்பாட்டுச் செயற்பாடுகளை தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளவும் தந்திரோபாயத்துடன் இச் சபையினைக் கையாள வேண்டிய தேவையினையும் நாம் புரிந்து கொண்டிருந்தோம்.
இதனால் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு நாம் மக்களைக் கோரியுமிருந்தோம்.
கடந்த மூன்று வருடங்களாக வடக்கு மாகாண முதலமைச்சர் என்ற பதவிநிலையினைப் பயன்படுத்தி முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தமிழ் மக்கள் மீதான கட்டமைப்பு ரீதியிலான இனவழிப்பு நடவடிக்கைகளுக்கு (Structural Genocide)) எதிராகக் குரல் கொடுத்து வருகிறார்.
அனைத்துலக சமூகத்தின் முன் தமிழ் மக்களின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துபவராகவும் முதலமைச்சர் இருக்கிறார்.
இவ் இரண்டு பணிகளையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் திறம்பட ஆற்றி வருவதனால் தமிழ் மக்களின் அன்புக்கும் அபிமானத்துக்கும் உரியவராக அவர் இருக்கிறார்.
இதேவேளை சிங்களப் பேரினவாதிகளாலும் அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதியினராலும் அவர்களுக்குச் சேவகம் செய்யும் எம்மவர்களில் ஒரு சிலராலும் அவர் வெறுக்கப்படுபவராக இருக்கிறார்.
மாகாணசபையின் ஊடாகச் செய்யப்பட வேண்டிய மேம்பாட்டு வேலைகள் திறம்பட நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு மாகாணசபை செயற்பட ஆரம்பித்த காலத்திலிருந்தே இருந்து வருகிறது.
இதற்கு பல்வேறுவகையான காரணங்களைக் கூற முடியும். சிங்கள அரச கட்டமைப்பின் இறுக்கமான பிடிக்குள் மாகாணசபை இருப்பதும் இதற்கு ஒரு முக்கியமான காரணமாகும்.
வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல், அதிகாரத் துஸ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு அறிக்கை தொடர்பாக முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைளின் விளைவாகவே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தமிழரசுக்கட்சியினால் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
நடந்த நிகழ்வுகளை உற்று நோக்கும்போது முதலமைச்சரின் நடவடிக்கைகள் தொடர்பாக கட்சிக்குள் எழுந்த அதிருப்திகளைப் பயன்படுத்தி முதலமைச்சர் விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் இருந்து அகற்றும் ஒரு சூழ்ச்சி இடம் பெறுவதாகவே எமக்குத் தெரிகிறது.
இச் சூழ்ச்சி மாகாணசபையின் இயங்குதிறன் காரணமாக வகுக்கப்பட்டதல்ல என்பதும் முதலமைச்சர் என்ற நிலையில் இருந்து அவர் வெளிப்படுத்தும் தமிழ் மக்களின் உரிமைகள் சார்ந்த குரலை நசுக்கி விடும் நோக்கத்திலேயே நிகழ்கிறது என்பதுவும் புரிகிறது.
இச் சூழ்ச்சியின் பின்னால் சிங்கள பௌத்த பேரினவாதமும் சில வெளிநாட்டு சக்திகளும் இருப்பதாகவே நாம் கருதுகிறோம். இச் சூழ்ச்சிக்கு எம்மவர்கள் சிலரும் துணைபோகும் நிலை வேதனைக்குரியது.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் உரிமைக்குரலின் ஒரு முக்கியமான பிரதிநிதி. இவர் முதலமைச்சர் பதவியில் இருந்து வெளிப்படுத்தும் கருத்துகளுக்கு அனைத்துலக அரங்கில் ஒரு பெறுமதி உண்டு.
இதனால் முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீளப் பெறுமாறு இத் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர்களைக் கோருகிறோம்.
இதனைச் செய்யத் தவறும் பட்சத்தில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தவறான பக்கத்தில் நின்றதாகப் பதிவுசெய்யப்பட்டு வரலாற்றில் குற்றவாளிக் கூண்டில் நீங்கள் நிறுத்தப்படுவீர்கள் என்பதனை முன்னெச்சரிக்கையுணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups