Home » » ரஜினிகாந்தை எங்களுடன் இணைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறதா?: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

ரஜினிகாந்தை எங்களுடன் இணைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறதா?: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

டெல்லி சென்ற முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கட்சி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு உள்ள ராம்நாத் கோவிந்த் வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று நாங்கள் கலந்துகொண்டோம். பிரதமர் மோடியை தனியாக சந்திக்கிற வாய்ப்பு ஏற்படவில்லை.
ஊடகங்களில் சில தினங்களாக வருவது போல கட்சி இணைப்பு தொடர்பான எந்த நோக்கத்துடனும் நான் டெல்லிக்கு வரவில்லை. தற்போதைக்கு இணைப்பு தொடர்பான எந்த முயற்சியும் இல்லை.
இரட்டை இலை சின்னத்தை வேட்பாளர்களுக்கு தரும் உரிமை கட்சியின் பொது செயலாளருக்கு மட்டுமே உள்ளது. அ.தி.மு.க.வின் சட்ட விதிப்படி தேர்ந்தெடுத்தால் மட்டுமே பொதுச்செயலாளராக வரமுடியும். நியமன முறையில் தேர்ந்தெடுக்கும் வழிமுறை இல்லை.
பொதுச்செயலாளரின் பதவி காலியாக இருக்கும் நிலையில் அடுத்துள்ள அவைத்தலைவர், பொருளாளர், தலைமை நிலைய செயலாளர் ஆகியோர் கட்சி பணிகளை ஆற்றுவார்கள் என்பதுதான் கட்சியின் சட்டம். தற்போது பொதுச்செயலாளர் இடம் காலியாக இருப்பதால் இரட்டை இலை சின்னத்தை பெறும் உரிமை யாருக்கும் இல்லை.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு எந்த பிரச்சினைக்கும் உடனுக்குடன் தீர்வு காணும் அரசாக இல்லை என்பது மக்கள் கருத்து. என்னுடைய கருத்தும் அதுவே. எங்களால் இந்த ஆட்சி கவிழாது.
ஆனால் மக்கள் நலன் கருதும் வகையில் திட்டங்களை செயல்படுத்தாவிட்டால் அரசு நிலைத்து இருக்க முடியாது. மெத்தன போக்குடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
நடிகர் ரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது என்பது எல்லாம் வெறும் வதந்தி. அரசியலில் சேருவது பற்றி ரஜினிகாந்த் கருத்துக்கணிப்பு நடத்த சொல்லியிருக்கிறாரா? என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
அரசியலுக்கு வருவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. அவர் முதலில் அது பற்றி அறிவிக்கட்டும். அதன் பிறகு பார்த்து கொள்ளலாம்.
அ.தி.மு.க.வில் 3 அணிகள் இருப்பது போன்ற மாயத்தோற்றம் உள்ளது. கட்சியின் தொண்டர்கள் முழுமையாக எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள். அவர்களிடம் ஆட்சி இருக்கிறது. தேர்தல் ஆணையத்துக்கு நாங்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் முறையாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி, சசிகலா, தினகரன் ஆகியோருக்கு இடையில் கருத்து வேறுபாடு இருந்தால் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில் 3 பேரும் ஒரே இடத்தில் எப்படி கையொப்பம் இட முடியும். அவர்கள் நடத்துவது நாடகமா? என்பது கட்சி தொண்டர்களுக்கு தெரியும். அ.திமு.க. இணைப்பு ஏற்படுவதற்காக உருவாக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டு விட்டது. எனவே இணைப்பு என்ற கேள்விக்கே இடமில்லை.
டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தமிழக பத்திரிகையாளர்கள் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் வருத்தம் அளிக்கிறது. ஜனநாயகத்தின் தூணாக செயல்பட்டு வரும் ஊடக துறையை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
முதல்-அமைச்சருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியம் தான். ஆனால் அதுவே மற்றவர்களை சிறுமைப்படுத்தும் வகையில் அமையக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups