நேற்று காலை சூரியவெவ - விஹாரகல பகுதியில் 4 வயதுச் சிறுவன் ஒருவன் நீர் தேங்கிய குழியொன்றில் விழுந்து உயிரிழந்துள்ளான்.
தனது தந்தையுடன் வயலுக்குச் சென்ற சிறுவனே இவ்வாறு இவ் விபத்திற்கு முகம்கொடுத்துள்ளான். சம்பவத்தில் சூரியவெவ, விஹாரகல சேர்ந்த கசுன் தனஞ்சய என்ற 4 வயதான சிறுவனே உயிழந்துள்ளான்.
தனது தந்தையுடன் வயலுக்கு சென்ற சிறுவன் அங்கு எறும்பு கடிப்பதாக தெரிவித்துள்ளார். சிறுவனை வீட்டுக்கு செல்லுமாறு தெரிவித்த தந்தை புற்களை வெட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் காலை 10 மணியளவில் தந்தை வீடு திரும்பிய நிலையில், மகன் வீட்டில் இல்லாத காரணத்தால் குழப்பமடைந்துள்ளார்.
அதனை தொடர்ந்து அயலவர்களுடன் இணைந்து தனது மகனை தேடும் போது நீர் தேங்கியிருந்த குழியொன்றில் விழுந்து கிடப்பதை பார்த்த தந்தை சிறுவனை சூரியவெவ வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.