Home » » பசிப்பிணியை போக்கிய தொண்டுக்காக பிரிட்டன் ராணியின் கையால் விருது பெற்ற இந்திய இளைஞர்

பசிப்பிணியை போக்கிய தொண்டுக்காக பிரிட்டன் ராணியின் கையால் விருது பெற்ற இந்திய இளைஞர்

இந்தியாவில் வீணாகும் உணவை சேகரித்து ஒற்றைவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாத ஏழை, எளியவர்களின் பசிப்பிணியை போக்கிய தொண்டுக்காக பிரிட்டன் ராணி எலிசபத்தின் கையால் இந்திய இளைஞரான அன்கிட் கவாட்ரா சிறப்பு விருதினை பெற்றுள்ளார்.
டெல்லியை சேர்ந்த இளைஞரான அன்கிட் கவாட்ரா(25) என்பவர் மூன்றாண்டுகளுக்கு முன்னர் செல்வந்தர் ஒருவரின் திருமண விருந்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். ஆடம்பரமான வெளிநாட்டு உணவு வகைகள் உள்பட மொத்தம் சுவைமிக்க 35 வகை உணவுப் பொருட்கள் இந்த விருந்தில் பரிமாறப்பட்டன.
இந்த உணவு வகைகள் மீதியாகி விட்டால் என்ன செய்வீர்கள்? என்று இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்த கேட்டரிங் நிறுவனத்தாரிடம் அன்கிட் கவாட்ரா மெல்ல விசாரித்தார். வேறு என்ன செய்யப் போகிறோம்? கீழே தூக்கி வீச வேண்டியதுதான் என்று பதில் வந்தது. இந்த விருந்தில் தற்போது எத்தனை பேருக்கான உணவுப் பொருட்கள் மீதியாக இருக்கின்றன? என்ற கேள்விக்கு கிடைத்த பதில் அவரை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது.
அதிகம் ஒன்றுமில்லை ஒரு பத்தாயிரம் பேர் சாப்பிடும் அளவுக்குதான் மிச்சமாக உள்ளது. இனி, அவை எல்லாம் குப்பைத்தொட்டிக்கு போக வேண்டியதுதான் என்ற அந்த பதிலால் அவரது உள்ளத்தில் ஒரு அபாரமான திட்டம் உதித்தது.

அதன் விளைவாக, கடந்த 2014-ம் ஆண்டு ‘ஃபீடிங் இந்தியா’ (Feeding India) என்ற ஒரு தொண்டு அமைப்பை அன்கிட் கவாட்ரா தொடங்கினார். ஆரம்பத்தில் சிறிய அளவில் இருந்த இந்த அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் டெல்லி பகுதியில் உள்ள பிரபல திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், விசேஷங்கள் நடக்கும் வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் மிச்சமாகும் உணவுப் பொருட்களை எல்லாம் சேகரித்து அவற்றை பசியால் வாடும் நடைபாதைவாசிகள், அனாதை ஆசிரமங்களில் வாழும் சிறுவர்-சிறுமியர்கள், முதியோர் இல்லங்களில் தஞ்சம் அடைந்துள்ள ஆதரவற்றோரின் பசிப்பிணியை இவர் போக்கி வருகிறார்.
ஆரம்பத்தில் டெல்லியில் மட்டுமே தொண்டாற்றிவந்த இந்த அமைப்பு இன்று நாடு முழுவதும் உள்ள 43 நகரங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அன்கிட் கவாட்ராவின் தலைமையின்கீழ் ‘ஃபீடிங் இந்தியா’  அமைப்பை சேர்ந்த சுமார் 4500 தொண்டர்கள் லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு அவர்கள் சுவைத்தறியாத உணவு வகைகளை அளித்து அவர்களின் வயிற்றை குளிர வைத்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்கள், மொபைல் ஆப்ஸ் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் தகவலுக்கு ஏற்ப குளிர்பதன வசதி செய்யப்பட்ட வாகனங்கள் மூலமாக உணவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அருகாமையில் பசியால் வாடுபவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
அன்கிட் கவாட்ரா செய்துவரும் தொண்டினை பாராட்டி ஐக்கிய நாடுகள் சபையின் நீடித்த வளர்ச்சி இலக்கை முன்னெடுத்து செல்லும் இளைஞர்கள் படையில் இவருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவரது சேவையை கவுரவிக்கும் வகையில் பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபத் பெயரால் ஆண்டுதோறும் அளிக்கப்படும் சிறப்பு விருதுக்கு அன்கிட் கவாட்ரா தேர்வு செய்யப்பட்டார். பிரிட்டன் அரசின் ஆட்சி பீடத்தை அரசி எலிசபத் 60 ஆண்டுகளாக அலங்கரித்து வருவதையும், காமன்வெல்த் நாடுகளுக்கு அவர் ஆற்றிவரும் வழிகாட்டுதலையும் சிறப்பிக்கும் வகையில் அரசியின் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளையின் சார்பில் இந்த விருது உருவாக்கப்பட்டது
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சிறப்பான பொதுச்சேவை ஆற்றிவரும் 18 மற்றும் 29 வயதுக்குட்பட்ட 60 இளைஞர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். அவ்வகையில், பக்கிங்காம் அரண்மனையில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ஆண்டு விருதுக்காக தேர்வானவர்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்திய இளைஞரான அன்கிட் கவாட்ராவுக்கு ராணி எலிசபத் இந்த சிறப்பு விருதினை அளித்து கவுரவித்தார்
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups