கர்நாடகா மாநிலத்தில், தாலியில் பவள மணி இருந்தால் கணவருக்கு ஆகாது என்ற வதந்தி பரவி, பெண்களிடம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில் கொப்பல், சித்ரதுர்கா, பல்லாரி, தேவங்கரே, ராய்ச்சூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களிலும், ஆந்திராவின் சில எல்லை மாவட்டங்களிலும், கடந்த செவ்வாய்கிழமை இரவு ஒரு வதந்தி பரவியது. பெண்கள் அணிந்திருக்கும் தாலியில் பவள மணி இருந்தால், புதன்கிழமை அன்று கணவர் இறந்து விடுவார்கள் என்ற தவறான தகவல் வேகமாக பரவியது.
இதனால் பீதியடைந்த பெண்கள் கூட்டமாக ஒன்று சேர்ந்து, தங்கள் தாலியில் உள்ள பவள மணியை கல்லால் அடித்து நீக்க முயற்சித்தனர். புதன் கிழமை மதியம் வரை இந்த வதந்தி பரவியது.
இதன் பிறகு மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, ‘ வதந்தியை நம்ப வேண்டாம்’ என, கோரிக்கை விடுத்தது. இத்துடன் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.