Home » » புதிய கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி: ரஜினிகாந்த் பரபரப்பு அறிவிப்பு

புதிய கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி: ரஜினிகாந்த் பரபரப்பு அறிவிப்பு

Image result for rajani kanth


சென்னை: ‘தனிக்கட்சி தொடங்கி, தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்’ என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
 கடந்த 26ம் தேதி முதல் தனது ரசிகர்களைச் சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த், 31ம் தேதி தனது அரசியல் நிலைப்பாடு  குறித்து அறிவிப்பதாகச் சொல்லியிருந்தார். அதன்படி, நேற்று காலை சென்னை கோடம்பாக்கத்திலுள்ள ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்த ரஜினிகாந்த், ரசிகர்கள் மத்தியில்  பரபரப்பாக பேசினார். அவர் பேசியது: முதலில் ரசிகர்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. இத்தனை நாட்களும் கட்டுப்பாடாகவும், ஒழுக்கமாகவும் நடந்து கொண்டீர்கள். 6 நாட்களில் 6 ஆயிரம் பேரை சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்டேன். யாரும் எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை. 

இதுபோல், கட்டுப்பாடும், ஒழுக்கமும் இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் சாதிக்கலாம். ேபாட்டோ எடுக்க முடியாத ரசிகர்கள் வருத்தப்பட வேண்டாம். அவர்களை இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறேன். மண்டபத்தில் இத்தனை நாட்களும் ரசிகர்கள் சந்திப்பு ஒழுங்காகவும், அமைதியாகவும் நடக்க ஒத்துழைப்பு கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் காவலர்கள், மண்டப நிர்வாகிகள், ரசிகர்கள், மீடியாவைச் சேர்ந்த அனைவருக்கும் என் நன்றி. ரொம்ப பில்டப் ஆகிவிட்டது இல்லையா? நான் எந்த பில்டப்பும் கொடுக்கவில்லை. அது தானாக ஆகிவிட்டது. எனக்கு  அரசியலுக்கு வருவதில் கூட பயம் இல்லை. இந்த மீடியாவைப் பார்த்தால்தான் பயம். பெரிய, பெரிய ஜாம்பவான்களே மீடியாவைப் பார்த்து பயப்படுகிறார்கள். நான் குழந்தை. காரில் வீட்டை விட்டுப் புறப்படும்போதும், திரும்ப வரும்போதும் மைக்கை எடுத்து என் முன்னாடி நீட்டுகிறார்கள். 

அரசியலுக்கு வரப்போவதாக சொல்கிறீர்களே, உங்கள் கொள்கைகள் என்ன என்று கேட்கிறார்கள். மறைந்த சோ என்னிடம், ‘மீடியாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்’ என்று பயம் காட்டி  வைத்திருந்தார். இப்போது சோ இருந்திருந்தால், எனக்கு 10 யானை பலம்  இருந்திருக்கும். ஆனால், சோ ஆத்மா எனக்கு பலமாக இருக்கும். குருஷேத்திரப் போரில், ‘கடமையைச் செய். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றார் கண்ணன். யுத்தம் செய்.  வெற்றி பெற்றால் நாடாள்வாய். தோற்றால் இறப்பாய். யுத்தம்  செய்ய மாட்டேன் என்று சொன்னால், கோழை என்று சொல்லிவிடுவார்கள். நான் ஏற்கனவே எல்லாவற்றையும் முடித்துவிட்டேன்.  இன்னும் அம்பு விடுவதுதான் பாக்கி. நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது  காலத்தின் கட்டாயம். வரும் சட்டசபை தேர்தலில் நான் தனிக்கட்சி  ஆரம்பித்து, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன். அதற்கு முன் உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. ஆனால், அதற்கு நேரம் இல்லாததால்  போட்டியிடவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் உரிய முடிவு எடுப்பேன். 

நான் அரசியலுக்கு வருவது பேருக்கும், புகழுக்கும், பணம் சம்பாதிப்பதற்காகவும்  இல்லை. அதை நீங்கள் ஆயிரம் மடங்கு எனக்குக் கொடுத்துவிட்டீர்கள். பதவி மேல் எனக்கு ஆசை  இருந்திருந்தால், 1996லேயே நான் அரசியலுக்கு வந்திருப்பேன். அது வேண்டாம் என்றுதான் தள்ளி வைத்திருந்தேன். 48 வயதில் அதை தள்ளி வைத்திருந்தேன். இப்போது எனக்கு 68 வயது. இந்த வயதில் அந்த ஆசை வருமா? அப்படி வந்தால், நான் பைத்தியக்காரன் இல்லையா. என்னை ஆன்மிகவாதி என்று சொல்வதில் அர்த்தமே இருக்காது இல்லையா. அரசியல்  இப்போது ரொம்ப கெட்டுப்போய் விட்டது. நாட்டு அரசியல் ரொம்ப கெட்டுப் போய் இருக்கிறது. ஜனநாயகம் சீர்கெட்டுப்போய் இருக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் தமிழ்நாட்டில் நடந்த சில  அரசியல் நிகழ்ச்சிகளும், சம்பவங்களும், ஒவ்வொரு தமிழக மக்களையும் தலைகுனிய வைத்து விட்டது. 

எல்லா மாநில மக்களும் நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். பழைய காலத்தில் போர் வரும்போது, அடுத்த நாட்டு கஜானாவைக்  கொள்ளையடித்துச் செல்வார்கள். இப்போது சொந்த நாட்டிலேயே, சொந்த பூமிலேயே  கொள்ளையடிக்கிறார்கள். இந்த நேரத்தில் இந்த முடிவை நான் எடுக்கவில்லை என்று  சொன்னால், என்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு நான் எதுவும் செய்யவில்லை என்ற அந்த  குற்ற உணர்வு என்னைப் பாதிக்கும். அரசியல் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது. முதலில் சிஸ்டத்தை மாற்ற வேண்டும். உண்மையான, நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, சாதி மற்றும் மதச் சார்பற்ற ஒரு ஆன்மிக  அரசியலைக் கொண்டு வர வேண்டும். அதுதான் என் நோக்கம், விருப்பம், குறி. அதை தனி மனிதனால் செய்ய முடியாது. தமிழக மக்களின் ஒத்துழைப்பு தேவை. இது சாதாரண விஷயம் இல்லை. கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடுவது என்பது, நடுக்கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்றது.

 ஆண்டவனின் அருள், மக்களின் அன்பு, அபிமானம், ஒத்துழைப்பு அனைத்தும் இருந்தால் சாதிக்க முடியும். ஆண்டவனின் அருளும், மக்களின் அன்பும் எனக்கு கிடைக்கும். அரசியலில் தொண்டர்கள்தான் ஆணிவேர், கிளை, இலை எல்லாமே. எனக்கு தொண்டர்கள் வேண்டாம். காவலர்கள்தான் வேண்டும். 
காவலர்கள் உதவியுடன்  ஆட்சி அமைத்தால், அரசிடம் இருந்து கிடைக்கும் அனைத்து உதவிகளும் மக்களைச் சென்றடையும். யார் தப்பு  செய்தாலும் தட்டிக்கேட்கும் காவலர்கள் வேண்டும். தகுந்த பதவிக்கு தகுந்த ஆளை  நியமித்து, அவர்கள் வேலை பார்க்கிறார்களா என்பதைக் கண்காணிப்பதே என் வேலை. காவலர்களின் பிரதிநிதி நான். முதலில் நாம் அந்தக் காவலர் படையை உருவாக்க வேண்டும். நகரம், கிராமம் எல்லாவற்றிலும் உள்ள பதிவு  செய்யாத மன்றங்களைப் பதிவு செய்து ஒருங்கிணைக்க வேண்டும். நாம் காவலர்களாக மாற வேண்டும். எல்லோரையும் நம் மன்றத்துக்குள் கொண்டு வர வேண்டும். இதுதான் நான் கொடுக்கும் முதல் பணி. இதை ஒரு குடைக்குள் கொண்டு வர வேண்டும். 

இது சினிமா  இல்லை. நாம் காவலர்களாக மாறப்போகிறோம். நாம் மட்டும் போதாது. பெண்கள்,  இளைஞர்கள் என அனைவரையும் நமது மன்றத்துக்கு கொண்டு வர வேண்டும். அதுவரை நான் உள்பட, யாரும் அரசியல் பேசக்கூடாது. எந்த அரசியல்வாதியையும் விமர்சனம் செய்ய வேண்டாம். யாரையும் தாக்கி அறிக்கைகள் தர வேண்டாம். அதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். அரசியல் குளத்தில் நீந்த வேண்டுமே தவிர, மூழ்கிவிடக்கூடாது. நாம் இன்னும் நீந்தவே ஆரம்பிக்கவில்லை. சட்டசபை தேர்தல் எப்போது வருகிறதோ,  அதற்கு முன் உரிய நேரத்தில் தனிக்கட்சி ஆரம்பிப்போம். செயல் திட்டத்தை உருவாக்குவோம். நாம் எதை, எதைச்  செய்யப்போகிறோம் என்பதை முதலிலேயே அறிவிப்போம். அப்படி செய்ய முடியாவிட்டால், 3  வருடங்களில் நாங்களே ராஜினாமா செய்வோம் என்று வாக்குறுதி அளிப்போம். நமது தாரக  மந்திரம் உண்மை, உழைப்பு, உயர்வு. நல்லதே நினைப்போம், பேசுவோம், செய்வோம். வரவிருக்கும் ஜனநாயகப் போரில் நம் படையும் இருக்கும். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார். 
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups