கொல்கத்தா: உச்சநீதிமன்றம் பதிவு செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணன் இன்று விடுதலையாகியுள்ளார். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ணன் (62), கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாக இருந்தார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அப்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன்கவுல் உள்பட பல நீதிபதிகள் ஊழல் செய்வதாக கடந்த 2015ல் பிரதமருக்கு கடிதம் எழுதினார். இவரது செயல்பாடு நீதிமன்றத்தை அவமதிப்பதாக உச்ச நீதிமன்றம் கருதியது. இதனால் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிபதி கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தியது. கர்ணன் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு அதிரடியாக மாற்றப்பட்டார்.
அங்கும் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்து வந்தார். இதனால், கர்ணன் மீதான அவதூறு வழக்கு விசாரணையின்போது நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. ஆனால் நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மனநல பரிசோதனைக்கு உத்தரவிட்டு புதிய சர்ச்சையை கிளப்பினார்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்றம், நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. அதன்படி நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதற்கிடையே நீதிபதி கர்ணன் தலைமறைவாகிவிட்டார். தலைமறைவாக இருந்து கொண்டே தன் மீதான சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி 4 முறை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் நீதிபதி கர்ணன் ஓய்வு பெற்றார்.
Home »
இந்தியச் செய்திகள்
» நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறைக்கு பிறகு விடுதலையானார் முன்னாள் நீதிபதி கர்ணன்