Home » » திருமண பாக்கியம் அருளும் லட்சுமி நாராயண வரதராஜ பெருமாள்

திருமண பாக்கியம் அருளும் லட்சுமி நாராயண வரதராஜ பெருமாள்

Related imageஉலகில் அதர்மங்கள் அதிகமாகும்போது தர்மத்தை நிலை நாட்டவும், பூவுலகை காக்கவும் அவதாரம் எடுப்பவர் எம்பெருமாள் நாராயணன். பாற்கடலில் ஆதிசேஷன் மீது திருமகளோடு பள்ளிகொண்டிருக்கும் நாராயணன் பூவுலகில் பல அவதாரம் எடுத்து மக்களின் இன்னல் போக்கி வருகிறார். அந்த வகையில் கடலூர் மாவட்டம் நல்லாத்தூர் கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீலட்சுமி நாராயண வரதராஜ பெருமாள் காட்சி அளிக்கிறார். 
 
கோயில் வரலாறு: 

நல்லாத்தூர் வரதராஜ பெருமாள் கோயில் 600 ஆண்டுகளுக்கு முன்னதாக குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. அடியவர்களுக்கு வரம் அருள்வதே எனது வாடிக்கை, அதை தவிர வேறுறொன்றும் அறியேன் என்று சொல்லி காஞ்சி பெரிய கோயிலில் வரதராஜ பெருமாளாக அமர்ந்தார். பின்னர் தனது அம்சமூர்த்திகளை பல்வேறு தலங்களில் அமர்த்திகொள்ளும் எண்ணமும் இருந்தது. ராவணனை வீழ்த்திய பின்னர், பாரத தேசத்தின் சிறுகிராமம் முதல் பெரிய நகரங்கள் வரை மக்களை காண்பதற்காக சீதாபிராட்டியோடு சென்றபோது இத்தலத்திற்கு வந்தார். தனது திருப்பாதத்தை பதித்து விட்டு செல்லுமாறு மக்கள் வேண்டிக்கொள்ளவே , அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.  

உட்புற சன்னதிகள்: 

அர்த்த மண்டபத்தில் திரிபங்கி ராமரும், பால மற்றும் வீர ஆஞ்சநேயர் என இரட்டை ஆஞ்சநேயர்கள், ராமர் பாதம், கருடன் சன்னதி, விஷ்ணு துர்க்கை, வேதாந்த தேசிகர் திருமங்கை ஆழ்வார் சன்னதிகள் உள்ளது. மார்கழி மாதத்தில் போகிப்பண்டிகையன்று பெருமாள் ஆண்டாள் திருக்கல்யாணமும், பங்குனி அல்லது சித்திரை மாதத்தில் ராமர் சீதா கல்யாணமும் நடைபெறுவது வழக்கம். ஆண்டாள் கல்யாணத்தின் போது ஆண்டாள் மாலை அணிந்து கோயிலை 8 முறை வலம் வந்து, விரதம் மேற்கொண்டால் திருமண தடைகள் நீங்கி திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ராமர் சீதை கல்யாணத்தின் போது காப்பு கட்டிக்கொண்டு விரதம் மேற்கொண்டால் திருமண தடைகள் நீங்கி உடனடியாக திருமணம் நடைபெறுமாம். 

புனித புஷ்கரணி: 

கோயில் உள்ளே அதிசயமான புஷ்கரணி கிணறு உள்ளது. இந்த கிணற்று தீர்த்தம் மிகவும் சுவை மிகுந்தது. இந்த கிணற்றில் உள்ள நீர் மழைகாலத்தில் உயர்வதும் இல்லை, கோடை காலத்தில் தாழ்வதும் இல்லை, எவ்வளவு வறட்சி வந்தாலும் வற்றியதும் இல்லை. பெருமாள் தாயார் திருமஞ்சனத்திற்கு இந்த கிணற்றில் இருந்துதான் நீர் எடுக்கப்படுகின்றது.

தல விருட்சம்: 
வரதராஜ பெருமாளுக்கு அத்திமரதம் ஸ்தல விருட்சமாகவும், பெருந்தேவி தாயாருக்கு வில்வமரம் ஸ்தல விருட்சமாகவும் உள்ளது. இரவு நேரத்தில் அத்தி மரத்தில் பெருமாளும், வில்வ மரத்தில் தாயாரும் வாசம் செய்வதாக ஐதீகம். கோயிலின் இரு புறங்களிலும் முறையாக திருநந்தவனம், சிறு நந்தவனம் என இரண்டு நந்தவனங்கள் அமைந்துள்ளது.  

சிறப்பம்சம்: 

இக்கோயி லில் கருடன் சன்னதி உள்ளது. இவர் உடலில் 8 நாகங்களுடன் சேவை புரிகின்றார். ஒவ்வொரு சுவாதி நட்சத்திரத்தன்று விசேஷ அர்ச்சனை செய்து வழிப்பட்டால் நாக தோஷம் நீங்குமாம். மாத அமாவாசைகளில் திருமஞ்சனமும் சுவாமி புறப்பாடு, ஆடி மாதத்தில் ஆடிப்பூர உற்சவம், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி, போகிப் பண்டிகை, ராமநவமி ஆகிய விழாக்கள் சிறப்பு மிக்கவை.

செல்வது எப்படி: 

கடலூரில் இருந்து 20 கி.மீ தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து மடுகரை வழியாக 30கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தவளக்குப்பம் வழியாக 20 கி.மீ தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. காலை 8.30 மணிமுதல் 1.30வரையும், மாலை 6.00 மணிமுதல் 8.30 வரை கோயில் திறந்திருக்கும். பேருந்து, ஆட்டோ வசதி உள்ளது. 
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups