Home » , » வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவி உடல் தகனம்: திரையுலகினர், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவி உடல் தகனம்: திரையுலகினர், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

இறுதி சடங்குகள் முடிந்த ஸ்ரீதேவியின் உடல்; மின் மயானத்திற்கு தயார்;நடிகை ஸ்ரீதேவியின் உடல் நேற்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு திரையுலகினர், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி (54) தனது கணவர் போனி கபூர், இரண்டாவது மகள் குஷி ஆகியோருடன் உறவினர் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் துபாய் சென்றார். திருமணம் முடிந்ததும் போனி கபூர், குஷி ஆகியோர் மும்பைக்கு வந்து விட்டனர். ஸ்ரீதேவி மட்டும் துபாயில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று போனி கபூர் மீண்டும் துபாய்க்கு சென்றார். மாலை 5.30 மணியளவில் ஓட்டல் அறையில் அவர் ஸ்ரீதேவியுடன் பேசிக்கொண்டிருந்தார். 

சிறிது நேரத்தில் பாத்ரூம் சென்ற ஸ்ரீதேவி, நீண்ட நேரமாகியும் வரவில்லை. கதவை உடைத்து சென்று போனிகபூர் பார்த்தபோது அவர் குளியல் தொட்டியில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். துபாய் சட்ட வழக்கப்படி அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், மது போதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்துள்ளார். இதில் நீரில் மூழ்கி ஸ்ரீதேவி இறந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு துபாய் சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்ட நடைமுறைகள் எல்லாம் முடிந்த பிறகு குடும்பத்தினரிடம் தேவியின் உடல் நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டது. இரவு மும்பைக்கு கொண்டு வரப்பட்டது.

இரவு 10 மணிக்கு மும்பை விமான நிலையத்தை உடல் வந்தடைந்த பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அந்தேரி மேற்கு லோக்கன்ட்வாலாவில் அமைந்துள்ள ஸ்ரீதேவியின் கிரீன் ஏக்கர் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. உடல் வருவதை அறிந்து தேவி வீட்டின் அருகே பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். உடலை பார்த்து தேவியின் மகள்கள் ஜான்வி, குஷி கதறி அழுதனர். இரவு முழுவதும் ஏராளமான நடிகர், நடிகைகள் மற்றும் தொழிலதிபர்கள் உட்பட பலர் வீட்டிற்கு வந்து தேவி உடலுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் நேற்று காலை 9.30 மணிக்கு அதே பகுதியில் உள்ள செலப்பிரேஷன் கிளப் அரங்குக்கு தேவி உடல் காஞ்சிபுரம் பட்டுப் புடவை அணிவித்து கொண்டு வரப்பட்டது. 

பகல் 12.30 வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. அமர்சிங், ஆதித்ய தாக்கரே, நடிகர்கள்  அமிதாப் பச்சன், அவரது மனைவி ஜெயா பச்சன், சல்மான் கான், ஷாருக்கான், அஜய் தேவ்கன், அனில்கபூர்,  விவேக் ஒபராய், அக்‌ஷய் கன்னா, சஞ்சய் கபூர், ஜான் ஆப்ரஹாம், பிரேம் சோப்ரா, பிரகாஷ் ராஜ், இம்தியாஸ் அலி, தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்,  இயக்குனர் கரண் ஜோகர், நடிகைகள் தீபிகா  படுகோன், ஐஸ்வர்யா ராய், ஜாக்லின் பெர்னாண்டஸ், வித்யா பாலன், ஜெயபிரதா,  பூமிகா, தபு, சோனல் சவுகான், சுஷ்மிதா சென், ஹேமாமாலினி, கரீஷ்மா கபூர்,  மாதுரி தீக்‌ஷித், ராக்கி சாவந்த், ரவீனா டண்டன் உட்பட பலர் ஸ்ரீதேவி  உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அங்கு ஆயிரக்கணக்கில் பொதுமக்களும் பிரபலங்களும் திரண்டதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அரசு மரியாதையுடன் உடல் தகனம் நடைபெறும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்தது. அதன்படி 4 போலீசார் அவரது உடலுக்கு தேசியக் கொடியை போர்த்தி மரியாதை செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு லோக்கன்ட்வாலா, ஜே.வி.பி.டி. வழியாக வில்லே பார்லேயில் உள்ள சேவா சமாஜ் மயானத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. 

அப்போது சாலை நெடுகிலும் சூழ்ந்திருந்த மக்களை அப்புறப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதில் பத்திரிக்கையாளர் சிலரும் லேசாக காயமடைந்தனர். ஏராளமான பொதுமக்களும் திரையுலகை சேர்ந்த சிலரும் வாகனத்துக்கு பின்னால் ஊர்வலமாக வந்தனர். சேவா சமாஜ் மயானத்தை அடைந்ததும் துப்பாக்கி குண்டுகள் முழங்க அங்கு அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவி உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது சிதைக்கு கணவர் போனி கபூர் தீ மூட்டினார்.

எல்லாம் வெள்ளை மயம்
தேவிக்கு வெள்ளை நிறம் அதிகம் பிடிக்கும். இதனால் அவரது உடல் வைக்கப்பட்ட செலபிரேஷன் கிளப் அரங்கத்தில் சுவர் முழுவதும் வெள்ளை போர்வையால் அலங்கரித்து இருந்தனர். அதேபோல் அவரது உடலை கொண்டு செல்ல வந்த வாகனத்தில் ஆயிரம் கிலோ வெள்ளை நிற சம்பங்கி பூக்களால் அலங்கரித்து இருந்தனர். ஸ்ரீதேவிக்கு அதிகம் பிடித்த காஞ்சிபுரம் பட்டு புடவையை அவருக்கு அணிவித்து இருந்தனர். எப்போதும் மேக்அப்பில் அதிகம் கவனம் செலுத்துவார். அதனால் அவரது உதட்டுக்கு சாயம் பூசி, முகத்துக்கு மேக்அப் போட்டிருந்தனர்.

உடலை இந்தியா கொண்டு வர உதவிய கேரள நபர்
சுற்றுலா விசாவில் துபாய் செல்பவர்கள் மரணிக்க நேர்ந்தால் அவரது உடலை சொந்த நாட்டுக்கு அனுப்ப துபாய் குடியுரிமை பெற்றவரின் கையொப்பம் தேவை. தேவி உடலை இந்தியா கொண்டு வர துபாயிலுள்ள அஷ்ரப் என்பவர் உதவியிருக்கிறார். துபாய் குடியுரிமை பெற்ற இவர் கேரளாவை சேர்ந்தவர். இதை சேவையாகவே செய்து வரும் இவர், இதுவரை 4 ஆயிரத்து 700 உடல்களை 38 நாடுகளுக்கு அனுப்ப உதவியுள்ளாராம்.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups