கேரட்டை பயன்படுத்தி கண்களுக்கு பலம் கொடுக்க கூடிய மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கேரட், தேங்காய் பால், வெல்லம், ஏலக்காய். செய்முறை: கேரட் சாறுடன் தேங்காய் பால் சேர்க்கவும். இதனுடன் வெல்லம், ஏலக்காய் சேர்த்து காலையில் சாப்பிட்டுவர கண்கள் பலம்பெறும். கண் நரம்புகளில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். பார்வை தெளிவாகும். எலும்புகள் பலம் பெறும். தோலுக்கு நன்மையை தருகிறது.
கேரட்டை கொண்டு வாய், வயிற்று புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கேரட், மோர். செய்முறை: கேரட் சாறுடன் சம அளவு மோர் சேர்த்து, காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்துவர வாய், வயிற்று புண்கள் ஆறும். ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாகும்போது மூட்டுவலி ஏற்படும். இப்பிரச்னைக்கு கேரட் சாறு மருந்தாகிறது. உள் உறுப்புகளில் ஏற்படும் வலி, வீக்கம், புண்களை ஆற்றும்.
கேரட்டை கொண்டு கல்லீரலை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய், கேரட், மஞ்சள், சீரகம். செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் விடவும். இதனுடன் கேரட் பசை, சிறிது மஞ்சள் பொடி, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வாரம் இருமுறை குடித்துவர ஈரல் வீக்கம் வற்றிப்போகும். ஈரல் பலப்படும். மஞ்சள் காமாலையை குணப்படுத்தும். இதய படபடப்பை போக்கும். கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் உப்பு சேர்க்காமல் எடுக்கவும்.
கேரட்டை கொண்டு சிராய்ப்பு காயங்களுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், கேரட். செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேய்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன் கேரட் பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி சிராய்ப்பு காயங்கள் மீது போட்டுவர காயம் குணமாகும். தழும்புகள், தீக்காயம் சரியாகும். கேரட்டை அடிக்கடி சாப்பிட்டுவர கண்கள், தோல், எலும்பு, ஈரல், இதயம் ஆகியவை பலப்படும் என்பதில் ஐயமில்லை. வாய் புண்ணை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். வயிற்றில் புண் அதிகமாகும்போது வாயில் புண் ஏற்படுகிறது. ஒவ்வாத உணவுகளை சாப்பிடும்போது வாய்ப்புண் அதிகமாகும். இப்பிரச்னைக்கு பொன்னாங்கண்ணி மருந்தாகிறது. சிறிதளவு பொன்னாங்கண்ணி இலைகளை மென்று சாற்றை விழுங்குவதால் வாய்ப்புண் விலகிப்போகும்.