அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் தன்னுடன்  பாதுகாப்பற்ற வகையிலான  உடலுறவில் ஈடுபட்டதாகவும் அந்த உறவு குறித்து தான் அம்பலப்படுத்த முயன்ற போது தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும்   சி.பி.எஸ். ஊடகத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பேட்டியளித்து  ஆபாச பட நடிகையான ஸ்டோர்மி டானியல்ஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்  வெள்ளை மாளிகையின்  பிரதான  பிரதி ஊடக செயலாளர் ராஜ் ஷா அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ட்ரம்ப் இந்த  அவதூறு செய்யும்  உரிமைகோரலை  பலமாகவும்  தெளிவாகவும் உறுதியாகவும் நிராகரிப்பதாக அவர் கூறினார்.
அதேசமயம் 2016  ஆம் ஆண்டு தேர்தலின் போது ஸ்டோர்மி டானியல்ஸுக்கு  டொனால்ட் ட்ரம்பின்  தனிப்பட்ட சட்டத் தரணியால் 130,000  அமெரிக்க டொலர் பெறுமதி யான  கட்டணம் செலுத் தப்பட்டிருந்ததாக தெரிவிக் கப்படும் பிறிதொரு குற்றச்சாட்டு குறித்து ராஜ் ஷா  தெரிவிக்கையில்,   வெள்ளை மாளிகை எந்தத் தவறான  செயலிலும் தொடர்புபட்டிருக்கவில்லை என்று கூறினார்.
அந்தக் கட்டணமானது டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் வெற்றிக்கு முன்னர் 2016  ஆம் ஆண்டு  ஒக்டோபர் மாதம் செலுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்டோர்மி டானியல்ஸால் அளிக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பேட்டியை  டொனால்ட் ட்ரம்ப்  நேரடியாக  அவதானித்திருந்தாரா என்பது குறித்து தகவல் எதனையும்   ராஜ் ஷா   வெளியிடவில்லை.
இதன்போது  டொனால்ட் ட்ரம்ப் ஏன் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் எதுவித விமர்சனத்தையும்  நேரடியாக இதுவரை முன்வைக்கவில்லை என ராஜ் ஷாவிடம் வினவப்பட்ட போது,  அது குறித்து கருத்து வெளியிடுவதா இல்லையா என்பது ஜனாதிபதி எடுக்கும் தீர்மானத்தைப் பொறுத்தது எனத் தெரிவித்தார்.