
இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐநா சபையும் கடும் எச்சரிக்கை விடுத்து வந்தன. மேலும் வடகொரியா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டன. ஆனால் எதற்கும் அசராத வடகொரியா, அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்கும் வலிமை தங்களிடம் இருப்பதாக கூறியது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே போர்ப்பதற்றம் நீடித்து வந்தது. இந்நிலையில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரிய வீரர்கள் பங்கேற்றனர். மேலும் தென்கொரியாவின் சிறப்புக் குழு ஒன்று வடகொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக ஆயுத சோதனையை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ள வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சம்மதித்தார். இந்நிலையில் வரும் மே மாதம் கிம் ஜோங் உன், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்புகள் இருப்பதாக தென் கொரிய பாதுகாப்பு ஆலோசகர் சுங் இயூ யோங் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் இந்த முயற்சியை உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் வரவேற்றுள்ளன. மே மாதம் வரை அணு ஆயுத சோதனைகளை வட கொரியா நடத்தக்கூடாது என அமெரிக்கா நிபந்தனை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.